மோடி 2வது முறை ஆட்சிக்கு வந்ததால், ஆயுள்கால பிரதமராக நினைத்து கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறினார்.

திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்பி திருநாவுககரசர், திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
.
ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் திட்டம் ஆகியவை தமிழக மக்களுக்கு எதிராவை. இது காவிரி டெல்டா பகுதியை பாழாக்கிவிடும். அதனால்தான், தமிழக மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

எந்த ஒரு திட்டமும் மக்களின் ஆதரவின்றி செயல்படுத்த முடியாது. மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக செயல்படுத்தினால், அது தோல்வியில்தான் முடியும். இதை உணர்ந்து மத்திய அரசு, செயல்பட வேண்டும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜனநாயக விரோத செயல்களில் மிக தீவிரமாக ஈடுபடுகிறார். குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநில அரசுகளை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். கர்நாடகா, கோவா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இதேபோல் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மோடி 2வது முறை ஆட்சிக்கு வந்ததால், ஆயுள்கால பிரதமராக நினைத்து கொண்டிருக்கிறார் என பேசினார்.

இந்தியாவில் இவர் மட்டும் 2வது முறையாக பிரதமராக வரவில்லை. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரும் தொடர்ச்சியாக பிரதமராக ஆட்சி செய்துள்ளனர்.


மோடி 2வது முறையாக பிரதமராக வந்துவிட்டதால், ஆயுள் கால பிரதமராக நினைத்து, இந்தியாவை இவருக்கு எழுதி பட்டா போட்டு கொடுக்கவில்லை. மோடிக்கு, மக்கள் மீண்டும் 5 ஆண்டு வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவ்வளவுதான். ஆனால், நிச்சயமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தேர்தலில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். எனவே மோடி, தனது ஜனநாயக விரோத செயல்களை நிறுத்தி கொள்ள வேண்டும் என தாக்கி பேசினார்.