மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும், ஒரு சமூகத்தினருக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை மக்களிடம் திணித்ததாகவும் திருமுருகன் காந்தி மீது இதுபோல காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி சார்பில் உயர் நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் திருமுருகன் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திருமுருகன் காந்தியின், மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அனைத்து வழக்குகளையும் அவர் எதிர் கொள்ளவேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.