தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அதிமுக ஆட்சி கவலைப்படவில்லை. ஆட்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காகவே, அதிமுகவினர் யாகம் செய்கிறார்கள் என சேப்பாகத்தில் நடந்த போராட்டத்தின்போது, திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை கண்டித்து, குடிநீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தியும் திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, மு.க.ஸ்டாலின் பேசியதாவது, தமிழகத்தில் நீதிக்கு பஞ்சம் வந்தது போல, நேர்மைக்கு பஞ்சம் வந்தது போல, குடிநீருக்கும் பஞ்சம் வந்துவிட்டது. இதை பற்றி கவலைப்படுவதற்கு முதல்வரோ, துணை முதல்வரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ இல்லை. குடம் இங்கே, தண்ணீர் எங்கே என்ற நிலை தான் உள்ளது.

மழை வேண்டு கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என கூறியிருக்கிறார்கள். அவர்கள் மழைக்காக யாகம் நடத்தவில்லை. ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே யாகம் நடத்துகிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கு முன்னதாவே சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளின் நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என சட்டமன்றத்தில் நான் எச்சரித்தேன். இப்போது ஐ.டி.,ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன.

சென்னை நெம்மேலி, போரூர், ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடியில் 4 குடிநீர் திட்டங்களை முதல்வர் அறிவித்தார். ஆனால் இதுவரை அதில் ஒன்று கூட நடைமுறைக்கு வரவில்லை. நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை துரைமுருகனும், நானும் வெளிக்கொண்டு வந்துள்ளோம்.

தமிழகத்தில் தேர்தல் வராமலே ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெம்மேலி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்ட ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என பேசினார்.