தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வந்தது. தென்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியிருக்கிறது.

சென்னையிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு உயர்ந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் சென்னையின் தண்ணீர் தேவைக்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகள் நிரம்பாததால் வரும் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகள் பாதியளவு தான் நிரம்பியிருக்கின்றன. இதன்காரணமாக கோடைகாலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சரியாக பருவமழை பெய்யாததால் இந்த வருடம் சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. தண்ணீருக்காக மக்கள் குடங்களை தூக்கி அலையும் அவல நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தென்மேற்கு பருவமழை வந்து சென்னை வாசிகளின் துயர் துடைத்தது. இந்தநிலையில் தமிழகத்தில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 7 விழுக்காடு அதிகம் பெய்திருந்தாலும் சென்னையில் மழையி 13 விழுக்காடு குறைந்திருக்கிறது. 

இதனால் 2020 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என நீர் மேலாண்மை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.