சென்னையில் ரவுடிசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்!
சென்னை பெருநகரில் ரவுடிசம் என்கின்ற ஒன்றுக்கு இடமில்லை அப்படி இருக்கும் பட்சத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு முற்றிலுமாக ஒடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்காக காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் வருகை புரிந்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், “நாங்கள் பொதுமக்களின் குறைகளை கேட்டு அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம். வருங்காலங்களில் இதே போன்று மாதத்தில் ஒருமுறை மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து காவல் துணை ஆணையர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வரும் மக்களிடம் சிஎஸ்ஆர் அளிக்கப்ட்ட பின்பு அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட வேண்டும். மேலும் அந்த புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.” என்றார்.
காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் மனு அளிக்கும் பொழுது அவர்களுக்கு சிஎஸ்ஆர் அளிக்கவில்லை என்றால் உடனடியாக இமெயில் மூலமாகவோ அல்லது காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறும் பொழுது, அதன் புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் குற்றவாளிகளை கைது செய்ய முடியும். அதில் தாமதம் செய்யும் பட்சத்தில் குற்றவாளிகளை கைது செய்வது கடினம். இதுகுறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகரை பொறுத்தவரையில் தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கைகளை ஆராய்ந்த பின்பு சிசிடிவி கேமராக்கள் மேலும் பொருத்தப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.” என்றார்.
சென்னையை பொறுத்தவரையில் ரவுடிசம் என்ற ஒன்றிற்கு இடம் கிடையாது என்ற அவர், ரவுடிசம் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை முற்றிலுமாக ஒடுக்கப்படும் என்றார். மேலும், போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக எனது தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக கடுமையாக நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.