திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை துவக்கத்தை முன்னிட்டு, நேற்று மாலை தெப்ப உற்சவ விழா நடந்தது.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணிகை முருகன் கோயில் திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் கடந்த 24ம் தேதி அஸ்வினி தினத்தன்று ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப உற்சவ திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதிகாலை முதலே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு காவடிகளை சுமந்தபடி பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் பரணி தினத்தை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் முருகனுக்கு சந்தன காப்பு உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலையில் முருகனுக்கு தங்க கவசத்துடன் பச்சை மரகதக் கல் அணிவிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் சரவணபொய்கை, நல்லான்குளத்தில் நீராடி, காவடிகளுடன் மலைப்பாதையில் நடந்து வந்து, அரோகரா கோஷத்துடன் முருகனை தரிசித்தனர்.

திருத்தணி மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆர்டிஓ பவணந்தி, தாசில்தார் செங்கலா மேற்பார்வையில் வருவாய் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் தீவிர சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று மாலை 6 மணியளவில் தெப்ப உற்சவ விழா நடந்தது. தெப்ப ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் துவக்கி வைத்தார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்கா ராமன், அமைச்சர் செல்லூர் ராஜு, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எம்.நரசிம்மன், ஆ.கிருஷ்ணசாமி உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

திருத்தணி முருகனுக்கு மாமன் முறையாக உள்ளவர் திருப்பதி வெங்கடேச பெருமாள். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து திருத்தணி முருகனுக்கு தாய் மாமன் சீர்வரிசை நேற்று கொண்டுவரப்பட்டது. இதில், திருப்பதி கோவில் இணை ஆணையர் அனில்குமார் சிங்கால், சிறப்பு அலுவலர் தர்மா ரெட்டி, தமிழ்நாடு திருப்பதி லைசன் ஆபிசர் குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பழனி முருகன் கோவிலில் இருந்து ராஜ அலங்கார சீர்வரிசையும் கொண்டுவரப்பட்டு திருத்தணி முருகனுக்கு சாத்தப்பட்டது.