திருப்பதி கோயில் சார்பில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் புகழ் பெற்ற கோயில்களில் நடக்கும் முக்கிய திருவிழா காலங்களில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி, ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் உள்ள முருகப் பெருமானுக்கு திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டியுடன் இணைந்து நேற்று பட்டு வஸ்திரங்களை கொண்டு சென்று சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

முன்னதாக திருத்தணியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருத்தணி கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர், கோயில் பொறுப்பு இணை ஆணையாளர் ஞானசேகரன் உட்பட அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளை வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்டனர்.

பின்னர், இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறுகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் முறையை 2006ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. தொடர்ந்து 4வது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

இதையடுத்து காஞ்சிபுரத்துக்கு சென்ற தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, நிதித் துறை அலுவலர் பாலாஜி, சிறப்பு அலுவலர் பால சேஷாத்திரி உட்பட அதிகாரிகள் அத்தி வரதரை தரிசனம் செய்து ஆந்திரா புறப்பட்டனர்.