அதிமுக கூட்டணியில் இன்று இறுதியாகிறது தொகுதி பங்கீடு.! எந்த கட்சிக்கு எத்தனை இடம் தெரியுமா.?
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. மேலும் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. எதிர்கட்சியான அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி, புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஎஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக உடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில்,
அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று தேமுதிக புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. இதற்காக இன்று காலை 10 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளார்.
கூட்டணி கட்சிக்கு எத்தனை தொகுதி.?
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம் தொகுதியும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு தேனி அல்லது மயிலாடுதுறை தொகுதி ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் பா ம க இடம் பெறாததால் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தேமுதிக கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதா என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும்.
வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு
மேலும் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு மேற்கொள்ளவுள்ள நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவாதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர்கள் , மீனவர்கள், என பல்வேறு தரப்பினரிடம் நேரில் கருத்து கேட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்
திமுகவில் யாருக்கு எந்தத் தொகுதி? வேட்பாளர் பட்டியலை நாளை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!