இன்று தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடையும் நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மட்டுமே பெய்த மழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும் பெய்ய தொடங்கியுள்ளது.

இதையொட்டி, நேற்று காலை, நீலகிரி மாவட்டம், நடுவட்டம் தேவாலாவில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. வால்பாறை, 3; சோழிங்கநல்லுார், 2; தாம்பரம், அரக்கோணம், திருத்தணி, சென்னை விமான நிலையம், ஊட்டியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, பரங்கிப்பேட்டையில், 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சென்னை விமான நிலையத்தில், 37, நுங்கம்பாக்கத்தில், 36 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருந்தது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் லேசான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யும் எனவே, பொதுமக்கள் வெளியே செல்லும்போது குடையுடன் செல்ல வேண்டும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது.

கர்நாடகா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில், தென் மேற்கு பருவமழை தீவிரமாகும். இதையொட், தமிழகத்தின் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யலாம். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,  புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில், வெப்பநிலை அதிகபட்சம், 37 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம், 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.