உத்தரபிரதேச மாநிலத்தில், அரசு அதிகாரிகளை தனது ஷூலேசை கட்ட வைத்தார் அமைச்சர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், அரசியல் வட்டாரங்களில், பெரும் பரபரப்பு நிலவுகிறது.

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச யோகா கொண்டாடப்பட்டது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடந்த யோகா நிகழ்ச்சியில் அந்தந்த மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், கவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் நடந்த யோகா நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் துறை அமைச்சர் லட்சுமி நாராயண் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும், அவர் புறப்பட்டார்.

அப்போது, அவரது கால் ஷூவை, அங்கிருந்த அரசு அதிகாரி ஒருவர் மாட்டி விட்டதுடன், லேசையும் கட்டி விட்டார். இந்த வீடியோ  தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அரசியல் வட்டாரங்களில், அமைச்சருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

 

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், ராமனின் செருப்பை வைத்தே ஆட்சி நடத்திய நாடு இது. அதேபோல், இதுவொருரு சகோதரரின் உதவியாக பாருங்கள், பாராட்டுங்கள் என கூலாக கூறிவிட்டு சென்றார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன், கடந்த சில நாட்களுக்கு முன், அனுமான், ஜாட் இனத்தை சேர்ந்தவர் என பேசி சர்ச்சையில் சிக்கியவர். அடிக்கடி இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இவருக்கு வாடிக்கையானது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.