தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:-

மருத்துவக் கல்வியை முறைப்படுத்துவதற்கான சட்டம் என்று கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் நிறைவேற்ற இருக்கும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் சமூகநீதிக்கு ஆபத்தான அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படும். இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் இப்போது இருப்பதைவிட பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை மாநில அரசால் நிர்ணயிக்க முடியாது. 50% இடங்களுக்கான கட்டணத்தை மருத்துவ ஆணையம் நிர்ணயிக்கும். தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இனி வரும் காலங்களில் தனியார் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கான கட்டணமாக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்படலாம். மீதமுள்ள 50% இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதால், அவற்றுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தான் மிகப்பெரிய கல்விக் கட்டண கொள்ளையாக அமையும்.

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் சேர முடிவதில்லை. தனியார் கல்லூரிகளுக்கு காட்டப்படும் இச்சலுகைகள் பற்றி கேட்ட போது, மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைவாக நிர்ணயித்தால் தனியார்துறையினர் மருத்துவக் கல்லூரி தொடங்க முன்வர மாட்டார்கள் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

ஏழை, நடுத்தர மாணவர்கள் மருத்துவம் படிப்பதை விட தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரி தொடங்கி கொள்ளையடிக்க அனுமதிப்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் சட்டமாக இருந்தாலும், கட்டண நிர்ணய முறையாக இருந்தாலும் அவை ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைப்பவையாகவே உள்ளன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.