அத்தி வரதர் வைபவத்தால் கடும் சிரமம் அடைந்து வரும் சின்ன காஞ்சிபுரம் மக்கள் சின்னா பின்னமாகிவிட்டதாக கூறுகிக்றனர். இதனால், வெளியே செல்ல முடியாமல் முடங்கி கிடப்பதாக புகார் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை நடைபெற உள்ளது.

இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து 44 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனா். பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனா். அத்திவரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர், கவர்னர், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்திவைபவத்தை காண, நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் வெளியில் வரமுடியாமல் முடங்கி கிடக்கின்றனர். சாதாரணமாக வெளியில் சென்றுவருவதற்கே கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சுற்று வட்டாரப் பகுதிகளான சேர்மன் சாமிநாதன் தெரு, திருவேங்கடம் நகர், வடக்கு மாடவீதி, குறுக்குத் தெரு, ஆர்எம்வி தெரு, அண்ணா தெரு, செட்டித் தெரு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்கள் தினமு வேலைக்கு செல்ல, மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் இருந்து தங்கள் வீட்டுக்கு செல்ல பஸ், ஆட்டோ இல்லாமல் அவதியடைகின்றனர். வீட்டில் இருந்து பைக்கிலும் செல்ல முடியவில்லை என புகார் கூறுகின்றனர்.

வெளியூர்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள போலீசார், உள்ளூர் மக்களை தங்கள் வீடூகளுக்கு செல்ல விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களுக்கும், காவலர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தினமும் அருகில் உள்ள பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. வெளியில் செல்ல எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. எங்களது கார், பைக்கில் வெளியே சென்று திரும்ப பெரும்பாடாக உள்ளது.

பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் எங்களை தரக்குறைவாக பேசுவதுடன், யாரையும் அனுப்ப முடியாது. வேண்டுமானா கலெக்டரிடம் சொல்லுங்க, எஸ்பி கிட்ட சொல்லுங்க என அடாவடியாக பேசுகின்றனர் என ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

வெளியூரில் இருந்து வந்துள்ள போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதால், உள்ளூர் மக்களை அடையாளம் காண முடியவில்லை. இதனால் அடிக்கடி சர்ச்சைகளும், வாய்தகராறும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன், சில உள்ளூர் போலீசாரையும் நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.