நீலநிற பட்டு உடுத்தி அத்திவரதர் காட்சியளித்தார். அவரது, சயன கோலம் இன்றுடன் நிறைவடைந்து, நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை நடக்கிறது. சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர், நாளை முதல் 17ம் தேதிவரை நின்ற கோலத்தில் காட்சியளிப்பார்.

இதுவரை உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து 43 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று, நீலநிற பட்டு உடுத்தி, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சயனகோலத்தில் அத்திவரதர் அருள்பாலிப்பு இன்றுடன் முடிவடைவதால், நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மேலும் உபயதாரர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் விஐபிக்கள் செல்லும் தரிசனப்பாதை மற்றும் விவிஐபி செல்லும் தரிசனப்பாதை இரண்டிலும் கூட்டம் அதிகமாக நெரிசலுடன் காணப்பட்டது.