தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை: ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம்!

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம் அமைக்க  நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது

Teynampet to Saidapet flyover  in Mount road at the cost of 621 crores to avoid the traffic

சென்னையில் உள்ள மிக முக்கியமான சாலைகளில் அண்ணா சாலையும் ஒன்று. நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் அண்ணா சாலையில் இணைகின்றன. இதனால், சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பெரிய சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த சிக்னல்களை கடக்கவே நீண்ட நேரம் ஆகும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளைக் கடந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்” என்று அறிவித்தார்.

இந்த நிலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் 4 வழி உயர்மட்டப் பாலம் அமைக்க  நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் நெடுஞ்சாலைத் துறை நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: “சட்டப்பேரவையில் அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை 3.2 கிமீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.621 கோடிக்கான நிர்வாக ஒப்புதல் வழங்கும்படி நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் அரசுக்குக் கடிதம் எழுதினார்.

சென்னையில் திடீரென நில அதிர்வு? பீதியில் அலறியடித்துக்கொண்டு வெளியேறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்..!

அக்கடிதத்தில், ‘இந்த உயர்மட்ட மேம்பாலம், சென்னை மாநகர சாலை பிரிவின் பராமரிப்பின் கீழ் வரும். நகரமயமாக்கம் மற்றும் தொழில்மயமாக்கம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால், மாநகரில் வாகன நெருக்கடி மிகுந்துள்ளது. வாகனங்களின் பயன்பாடும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. தாடண்டர் நகர், சிஐடி நகர், நந்தனம், செனடாப் சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்புகளில் 3 கி.மீ. தொலைவில் சிக்னல்களை கடந்து செல்வதற்கான தாமதம் என்பது சராசரியாக 16 நிமிடமாக உள்ளது.

இந்த சாலைப் பகுதியில் வாகன அடர்த்தி நிர்ணயிக்கப்பட்ட 10,000 என்பதைத் தாண்டி தற்போது 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எனவே, தற்போதைய வாகன வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்த சாலையைக் கூடுதல் வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றுடன் கூடுதலாக திறன் மிக்க பெரிய அளவிலான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கிமீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்ட மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொதுமேலாளரின் அனுமதி பெறப்பட்டு, தரைக்கு அடியில் செல்லும் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானத்தைக் கருத்தில் கொண்டு, ரூ.500 கோடிக்கான காப்பீடும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ரூ.621 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசனையின் படி, கண்காணிப்பு நிறுவனத்தை நியமிப்பதற்கான அனுமதியும் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இதைக் கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு, ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி மற்றும் கண்காணிப்பு நிறுவனத்தை நியமிப்பதற்கான அனுமதியும் அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios