சென்னையில் திடீரென நில அதிர்வு? பீதியில் அலறியடித்துக்கொண்டு வெளியேறிய பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்..!
சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் பகுதியில் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. 9 தளங்கள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 கட்டிடங்களில் மொத்தம் 180 வீடுகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிலஅதிர்வு உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு சுமார் 20 வினாடிகள் நீடித்ததாக கூற்படுகிறது. பின்னர், குடியிருப்பு வாசிகள் அலறியடித்துக்கொண்டு குடும்பத்துடன் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
மேலும், இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த திடீர் நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேபோல கட்டிடத்தில் எதாவது மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது ஆய்வுக்கு பிறகே தெரியவரும். இந்த சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.