அதிக மின் அழுத்தத்தின் காரணமாக வீட்டில் டிவி வெடித்து குடும்பத்தில் உள்ளவர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிந்திக்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும் இவ்உலகத்தில் சில  எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை சிந்திக்கவைப்பதுடன் சிலநேரங்களில் அச்சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடையவும் வைத்துவிடுகிறது. அப்படியான ஒரு சம்பவம் திருத்தணியில் நேற்று நடந்துள்ளது. திருத்தணி அக்கா நாயுடு தெருவில் வசிப்பவர் கூலித்தொழிலாளி அஸ்லாம் பாஷா இவரது மனைவி நூர்ஜகான் நேற்று வீட்டில் டீவியில்  சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது திடீரென டிவியிலிருந்து மெல்லிய சத்தம் வருவதைப்போல் இருந்தது, சீரியலில் இருந்துதான் சத்தம்வருகிறது என்று எண்ணி அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. 

 

சிறிது நேரத்தில்  யாரும் எதிர்பார்க்காத வகையில் தொலைக்காட்சிப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதில் வீட்டிலிருந்த மின்சார வயர்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானதுடன், வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.  உடனே வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர்,  நூர்ஜகான் வெளியே ஓடிவந்து சத்தம்போட்டார் உடனே அக்கம்பக்கத்தினர் வந்து மின்சார வயர்களை துண்டித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மின்சார துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்வயர்களை ஆராய்ந்தனர், அதில் அந்த பகுதியில் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளதாக பின் அவர்கள் தெரிவித்தனர் 

அத்துடன் மின்மாற்றியையும் அவர்கள் சரி செய்து கொடுத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  ஆர்வமாக சீரியல் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென  டீவி பெட்டி வெடித்துள்ள சம்பவம் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.