தமிழகத்தில் 2 மாதங்களுக்கு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால், ஜூன் 1-ம் தேதி அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக மாணவர்கள் வந்துசெல்ல பேருந்து வசதி, இ-ஹால் டிக்கெட் உள்பட பல வசதிகள் செய்து தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் சார்பில் தொடரப்பட்டுள்ளது. அதில், ‘பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் பொதுத்தேர்வை அரசு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம். எனவே மாணவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி வகுப்பு  நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால். தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.