சென்னை அருகே இருக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஞானமணி.  அங்கிருக்கும் ஒரு எலக்ட்ரிக் கடையில் பணியாற்றி வருகிறார்.ஞானமணி வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் ஒரு டீ கடையில் தினமும் சென்று டீ அருந்துவது அவரது வழக்கம். நேற்றும் அங்கு சென்று டீ அருந்தியுள்ளார். கடையில் டீ மாஸ்டராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண் என்பவர் இருந்துள்ளார்.

அப்போது கடையில் பஜ்ஜி போடப்பட்டுள்ளது. மழைக்கு இதமாக சூடாக பஜ்ஜி சாப்பிடலாம் என்று நினைத்த ஞானமணி வாங்கி சுவைத்து பார்த்திக்கிறார். பஜ்ஜி ருசியாக இல்லை என்று தெரிகிறது. இதனால் டீ மாஸ்டரிடம் 'பஜ்ஜி ஏன் நன்றாக இல்லை? சுவையாக போட வேண்டியது தானே' என்று கூறியிருக்கிறார். இதில் இருவருக்குள்ளேயும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த டீ மாஸ்டர் அருண் வாழைக்காய் வெட்டும் கத்தியை எடுத்து ஞானமணியை குத்தியிருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த ஞானமணி வலியால் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பூக்கடை காவலர்கள் காயமடைந்த ஞானமணியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வருவதை அறிந்ததும் அருண் அங்கிருந்து தப்பி ஓடி அதே பகுதியில் பதுங்கி இருந்தார். இதையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

பஜ்ஜி நன்றாக இல்லை என்று கூறிய வாடிக்கையாளரை கத்தியால் குத்திய டீ மாஸ்டரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.