சென்னையில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம், 28ம் தேதி வள்ளலார் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். 

உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் மது கூடத்தில் மதுபான விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.