உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி மது விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் முழு மது விலக்கை  அமல்படுத்த வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அதன்படி முதற்கட்டமாக கடந்த 2016-17-ம் ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி என இருந்த டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என நேரம் மாற்றம் செய்யப்பட்டது.

 

தற்போது 5180 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடை இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இருப்பினும், டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடை குறைந்தாலும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. 

இந்நிலையில் மதுக்கடைகளை காலையில் திறப்பதற்கு பதில் மதியம் திறந்தால் என்ன? என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதுகுறித்து அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மதுக்கடைகளை பகல் 12 மணிக்கு பதில் மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.