நாமக்கல் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்படுகிறது.

இங்கு, 5500 எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது லாரிகள் மூலம் ஐஓசி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.

மேற்கண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களின்  5 ஆண்டு ஒப்பந்தம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிந்தது. அதன்பின், போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில், அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கப்பபடும் என எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் இடம் உள்ளன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 லாரிகளுக்கு வேலை இல்லை. எனவே, அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடந்த 20ம் தேதி நடந்த சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சங்கம் சார்பில், மேற்கண்ட ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால், இன்று தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26ம் தேதி தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் தொடருவோம் என டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என கியாஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.