லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது . இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்தது .

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது . குறிப்பாக கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர் . சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன . பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . சென்னை விமான நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . ராணுவம் மற்றும் விமானப்படை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது .

தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா , கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .