தமிழகத்தில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல் நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 

இதனால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்நிலையில் இந்திய வானிலை மையம் கூறுகையில், தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னையில், வில்லிவாக்கம், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, தி.நகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சோழிங்கநல்லூர், கிண்டியில் 11 செ.மீ., மயிலாப்பூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லையில் மணிமுத்தாறு 15 செ.மீ., அம்பாசமுத்திரம் 9.5 செ.மீ., பாளையங்கோட்டை 8 செ.மீ., ராதாபுரம் 4.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.