சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசு தரப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுத்து வந்த போதிலும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதுவரை தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதன்படி, சென்னையில் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக கடந்த 15 நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மே 18ம் தேதி வரை சென்னையில் மொத்தம் 7117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சென்னையில் 500க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மே 31ம் தேதி 803 பேருக்கும், நேற்று 964 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் மொத்தமாக சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் சூழலில் தற்போது கொரோனா தொற்று காரணமாக 50% அதாவது 3000 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு வாரங்களில் மட்டும் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 8 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற பணியாளர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காலங்களில் சமூக இடைவெளியின்றி பணியாற்றுவது நோய் தொற்றை பரப்பும் என்பதால் 50% பணியாளர்களை 33% பணியாளர்களாக குறைக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளது.