இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுதியானதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்திருக்கிறது.  நேற்றுவரை தமிழ்நாட்டில் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருந்தனர். 47 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த நிலையில் தற்போது தமிழ் நாட்டில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9,527 நபா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு 969 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 485 நபா்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.