வடகிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கூறுகையில், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மேலும், வடகிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. ஆகையால், தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ., சாத்தான்குளம் மற்றும் நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 2 செ.மீ., ராதாபுரம் மற்றும் பேச்சிப்பாறையில் 1 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.