நவம்பர் 15ல் சிறைக் கைதிகளின் ஊதியம் தொடர்பாக முடிவெடுக்க  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கைதிகளின் ஊதியம் தொடர்பாக  முடிவெடுக்கப்படும் என  அரசுத்தரப்பில் மதுரைக்கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,  தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்குவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.   

மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"
தமிழக சிறையில் கைதிகள் திறன் அடிப்படையில் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணி ஒதுக்கப்படும். இப்பிரிவினருக்கு அதிதிறன் மிக்கவருக்கு 100 ரூபாயும், திறன் மிக்கவர்களுக்கு 80 ரூபாயும், திறன் குறைந்தவர்களுக்கு 60 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. சிறை விதி்ப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன்படி தமிழக சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஊதிய உயர்வு குழு அமைக்கப்படவில்லை.  சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கு எதிரானது.

புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன் மிக்கவர்களுக்கு 180 ரூபாயும் திறன்மிக்கவர்களுக்கு 160 ரூபாயும், திறன் குறைந்தவர்களுக்கு 150- ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.  கேரள மாநிலத்தில் சிறைவாசிகளின் ஊதியம் பிடித்தம் இல்லாமல் வழங்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில்  கைதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத தொகையை அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருந்தேன்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிறை கைதிகளின் ஊதியத்தில் 50 சதவீதம் பணம் பிடித்தம் நியாயமானதாக இல்லை. ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்து விட்டு அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது. தமிழகத்தில் சிறை கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி சம்பளம் வழங்கப்படவில்லை. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, 1983ல் கொணரப்பட்ட கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்துரத்துசெய்யப்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கைதிகளின் ஊதியத்திலிருந்து உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்யவும், குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி கைதிகளுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யவும் தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தொடர்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை தரப்பில் நவம்பர் 15ல் சிறைக் கைதிகளின் ஊதியம் தொடர்பாக முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கைதிகளின் ஊதியம் தொடர்பாக  முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதனை பதில்மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.