ஊரடங்கையும் உத்தரவை மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக, இந்தியா முழுவதும் 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றக்கூடாது என்றும் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், சோதனை சாவடிகள் அமைத்தும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறார்கள். மீறி வருபவர்களுக்கு கடுமையாக தண்டனையும் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலையில் பாடி மேம்பாலத்தில் திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் வரிசையில் நின்றார்கள். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர், வாகன ஓட்டிகளின் அடையாள அட்டையினை சோதனை செய்து அவசர தேவைகளுக்காக செல்பவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட வாகன ஓட்டிகளை மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும், மேம்பாலத்தின் 3 புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் மக்கள் அச்சம்  அடைந்துள்ளனர்.