வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு ஒரு சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை இரவு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காமாட்சிபுரம் 16 செ.மீ., கள்ளக்குறிச்சி 14 செ.மீ., வேடசந்தூர் 13 செ.மீ., பட்டுக்கோட்டை 11 செ.மீ., தஞ்சாவூர் செ.மீ., உளூந்தூர்பேட்டையில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.