நீ எப்படியும் வந்து விடுவாய் என்று ஊன் உறக்கம் இன்று  இரவு பகலாக காத்திருந்தேன் ஆனால் எப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை என சிறுவன் சுர்ஜித்துக்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 25-10-2019 ஆம் தேதி மாலை 5 40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும்பணி  80 மணிநேரமாக நடைபெற்று வந்த நிலையில்,  ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் உடல் நான்கு நாள் முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்டது.  இன்று அதிகாலை குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித் உடல் இன்று காலை ஆவாரம்பட்டி பாத்திமா புதுநகர் கல்லறைக்கு கொண்டுச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டான். நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் மண்ணுக்குள்ளேயே உயிரிழந்து தமிழகத்தையே,  ஏன் உலகத்தமிழர்களையே துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல தரப்பிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறன. 

இதுபற்றி  இரவுபகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,  " நீ எப்படியும் வந்து விடுவாய் என்று நான் ஊன் இன்றி உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் காத்திருந்தேன்,  மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன்,  ஆனால் இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை.  மனதை தேற்றிக் கொள்கிறேன் இனி நீ கடவுளின் குழந்தை சுர்ஜித் . 85 அடியில் நான் கேட்ட உன் மூச்சு சப்தம்தான் என்னை தந்தை ஸ்தானத்தில் மீட்புப் பணியில் ஈடுபட வைத்தது.  நான் மட்டுமல்ல இந்த உலகமே உனக்காக அழும் குரல் எனக்கு இன்னமும் கேட்கிறது, என தன் வலியை உருக்கமாக பதிவு செய்துள்ளார் அமைச்சர்.