தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக அரசின் சார்பாக தனியாக தொலைக்காட்சி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது . இதற்கான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது . கடந்த சில மாதங்களாக இதற்கான சோதனை ஓட்டங்கள் நடந்தது . சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "கல்வித் தொலைக்காட்சி" என்கிற பெயரில் செயல்படும் என்று அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டது .

இந்த நிலையில் கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடக்க விழா இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் .

கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள் , மாணவர்களின் கண்டுபிடிப்புகள்  போன்றவை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட இருக்கிறது .மழலையர் கல்வி  தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களும் ஒளிபரப்ப இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினார் .

வேலைவாய்ப்பு செய்திகளும், சுயதொழில் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட உள்ளன. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல் எண்.200-ல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 53 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது .

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் கல்வித்துறையின் செயல்பாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சத்தமில்லாமல் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து  விளம்பரம் செய்யும் செயலுக்கு, புதிய விதிமுறைகள் மூலம் தடை செய்து பல மாற்றங்களை செய்தது குறிப்பிடத்தக்கது .