Asianet News TamilAsianet News Tamil

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... செய்முறை தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

12ம் வகுப்பு செய்முறை தேர்வின் போது கைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamilnadu government release 23 guidelines for  12th standard practical exam
Author
Chennai, First Published Apr 9, 2021, 4:07 PM IST

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள போதும், பொதுத்தேர்வு காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tamilnadu government release 23 guidelines for  12th standard practical exam

இடையில் தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக 12ம் வகுப்பு ஏப்ரல் 2ம் தேதியில் இருந்து 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக ஏப்ரல் 16ம்  தேதி முதல் 23ம் தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இடையில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

Tamilnadu government release 23 guidelines for  12th standard practical exam

ஆனால் திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது. அதை உறுதிபடுத்தும் விதமாக 12ம் வகுப்பு செய்முறை தேர்வின் போது கைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 23 வழிகாட்டு நெறிமுறைகள் இதோ...  


1. செய்முறைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் தேர்வுக் கூடங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

2. செய்முறை தேர்வு முடிந்ததும் அனைத்து சாதனங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

3. தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

4. தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.

5. கிருமிநாசினி (சானிடைசர்) எளிதில் தீப்பற்றும் தன்மை கொண்டது. எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

6. கையில் கிருமிநாசினி பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொடக் கூடாது.

7.செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

8. செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

9. உள்காற்றை வெளியே தள்ளும் மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.

10. அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.

11. தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.

12. மாணவர்கள் சொந்தமாக கிருமிநாசினி, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.

13. ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பின்பும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

14. ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

15. ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பிரிவு மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

16. ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

17. பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்திருக்க வேண்டும்.

18. கழிவறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

19. மாணவர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேதியை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பார்.

20. நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி செய்து தருவார்.

21. வேதியியல் செய்முறைத் தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. வாய்வழியாக ரசாயனங்களை உறிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

22. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்தேர்வில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள் மைக்ரோஸ்கோப் லென்ஸ் அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்மூலம் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

23. சமூக இடைவெளியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவருக்கும் 4 சதுர மீட்டர் தொலைவில் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்ட வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios