சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 56 வயதானவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக, சென்னையில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்துள்ளது. இதில், நாளிதழ் நிருபர் ஒருவரும், தொலைக்காட்சி உதவி ஆசிரியர் ஒருவரும் அடங்குவர். இப்போது சென்னையில் மட்டும் 285 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 133 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 108 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 74 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று காரணமாக பழைய மாமல்லபுரம் சாலையை சேர்ந்த 56 வயதானவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.