அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீண்டும் கேபிள் டி.வி. சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சேனல் அதிபர்கள் மிரள ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அதிகாரமிக்க பதவிகளில் மிக முக்கியமானது கேபிள் டிவி சேர்மன். ஏனென்றால் தமிழகத்தின் தொலைக்காட்சி சேனல்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த பதவிக்கு உண்டு. ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்ற உடனேயே செய்த வேலை தான் இந்த கேபிள் டிவி கார்ப்பரேசன். அப்போது ஜெயலலிதாவால் கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். 

அந்த பதவியில் சுமார் 5 ஆண்டுகள் வரை உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்தார். இந்த கால கட்டத்தில் தான் சன் டி.வி. தமிழகத்தில் முடக்கப்பட்டது. சன் நியூஸ் என்கிற ஒரு சேனலையே கேபிள் டிவியில் இருந்து துணிச்சலாக அகற்றினார் உடுமலை. மேலும் பே சேனலாக இருந்த சன்.டி.வி.யை அவர்களுக்கு பணம் கொடுக்காமலேயே இலவசமாக மக்களுக்கு காட்டினார். மேலும் கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி கேபிள் டிவியில் ஒளிபரப்பாகமலேயே பார்த்துக் கொண்டார்.

மேலும், தொலைக்காட்சி சேனல் நடத்துபவர்கள் தங்கள் சேனலை மக்கள் எளிதாக பார்க்கும் வகையிலான எண்ணில் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கென மாதம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும், கட்டிங் கொடுக்கவேண்டும் என்கிற வழக்கத்தையும் இவர் தான் கொண்டுவந்தார். இதன் மூலம் கேபிள் டிவியை ஆபிசியலாகவும், அன் அபிசியலாகவும் பணம் கொழிக்கும் ஒரு தொழிலாக தமிழக அரசுக்கு மாற்றிக் காட்டினார்.

அரசுக்கு எதிராக செய்தி ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்யும் வழக்கத்தையும் உடுமைலை தான் கொண்டு வந்தார். இப்படி பாதிக்கப்பட்டது தான் மக்கள் தொலைக்காட்சி. அவ்வப்போது புதிய தலைமுறை, நியூஸ் செவன் போன்ற தொலைக்காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படும், பிறகு அதிமுகவிற்கு ஆதரவாக செய்தி ஒளிபரப்பிய பிறகு மீண்டும் மக்கள் பார்வைக்கு கொடுக்கப்படும். 

இந்த வழக்கம் தான் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 2016ம் ஆண்டு அமைச்சரான பிறகு கேபிள் டிவி சேர்மன் பதவியில் இருந்து உடுமலை நீக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த பதவியில் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில உடுமலை ராதாகிருஷ்ணனை மீண்டும் கேபிள் டிவி சேர்மனாக எடப்பாடி நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் மீண்டும் பழையபடி மாமூல் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமா என்கிற பீதியில் சேனல் அதிபர்கள் உள்ளனர்.