தயது செய்து பூக்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள், அதை நசுக்கி விடாதீர்கள் என சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண் கலங்கியபடி பேசியுள்ளார். 

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. தினமும் நாட்டில் எங்காவது ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்தியை தினமும் படிக்கிறோம். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.

 

இந்நிலையில், கடந்த மாதம் தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி 4 பேர் கொண்ட கொடூர கும்பலால் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் 23 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பேசும்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண்கலங்கினார். பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என கூறி விட்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, ஒரு ஆண் பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

புன்னகையுடன் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புகிறாள். என்றால் இது நடக்காத விஷயமாக இருக்கிறது. பெண்களுக்கு தற்காப்புத் கலை கற்றுதர வேண்டும். கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. சமூகம் திருத்தப்பட வேண்டும். அனைவரும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தயது செய்து பூக்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள், அதை நசுக்கி விடாதீர்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.