சென்னை தலைமை செயலகத்தில் 4-ம் எண் நுழைவு வாயிலில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

எப்போது பரபரப்பாக இருக்கக்கூடிய தலைமை செயலகத்தில் இன்று அரசு விடுமுறை என்ற காரணத்தால் பெருமளவு அதிகாரிகள் இல்லை. இந்நிலையில், தான் 4 அடி நீளம் கொண்ட நல்லபாம்பு 4-ம் எண் நுழைவு வாயில் வழியாக தலைமைச்செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் நுழைந்தது. இதை கண்டதும் ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். பின்னர், அங்கிருந்த காவலர்கள் விரட்டியதையடுத்து அருகில் இருந்த புதருக்குள் சென்று மறைந்தது.

 

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் நீண்ட நேரம் ஈடுபட்ட பின்னர் அதை லாபகரமாக பிடித்து சென்றனர். 

வழக்கமாக தலைமை செயலகம் சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் உள்ளே நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.