தமிழகத்தின் 46-வது புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை செயலக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்து வரும் கிரிஜா வைத்தியநாதன் பணிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு தலைமைச் செயலகத்தில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதையொட்டி அடுத்து, நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

கடந்த 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு பணியில் சேர்ந்த சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்து வந்தவர். கடந்த 2010-ம் ஆண்டுமுதல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர். 

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலாளராக பதவியேற்கும் முன் காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அவர் பேசினார். நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தமிழகத்தின் 29-வது டி.ஜி.பி. ஆக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்றுக்கொண்டார்.