தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மற்றும் மாமனாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  

கொரோனா வைரஸ், உலகம் முழுதும் சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தொற்றி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்துவருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நேற்றும் இன்றும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டும், பாதிப்பு பெரியளவில் உயராமல் கட்டுக்குள் தான் இருக்கிறது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கட்டுக்குள் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,71,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகியோரும், திமுக, அதிமுக எம்.ஏல்.ஏக்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. திமுக எம்.எல்.ஏவாக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். 

கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்த சமயத்தில் பீலா ராஜேஷ் தான் சுகாதாரத்துறை செயலாளராக இருந்தார். கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்துவதற்காக, ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.

எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் இறங்கி பணியாற்றிவருகிறார் ராதாகிருஷ்ணன். இந்நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் மாமனாருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.