இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தன் உயிரை பெரிதாக கருதாமல் மருத்துவர்கள்  இரவு பகல் பாராமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதில், சிலர் மருத்துவர் நோய் தொற்று ஏற்பட்டு  உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 23 பேரும், குஜராத்தில் 20 பேரும், பீகாரில் 15 பேரும், டெல்லி, கர்நாடகாவில் தலா 12 பேரும், ஆந்திரா மற்றும் உ.பி.யில் தலா 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.