உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 700ஐ நெருங்கிவருகிறது. 14 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

கொரோனா வைரஸ், சமூகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் திறந்துள்ளன. 

மிகவும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சிலர் வேண்டுமென்றே காரணமே இல்லாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். தனிமைப்படுதல் மற்றும் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தினாலும் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

ஆனாலும் காரணமே இல்லாமலும் பொய்யான காரணங்களை கூறியும் சிலர் பொதுவெளியில் சுற்றித்திரிகின்றனர். அவ்வாறு சமூக பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.

மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதாக கூறி பொதுவெளியில் சுற்றுகின்றனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை நடத்தினார். அதன்பின்னர், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு வந்தாலும் 3 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். 

உபேர், ஸ்விக்கி, ஸொமேட்டோ ஆகிய ஆன்லைன் உணவு நிறுவனங்கள் டோர் டெலிவரி செய்வதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவனங்கள், வங்கிகள், சுயநிதிக்குழுக்கள் என எந்த நிதி நிறுவனமாக இருந்தாலும் மக்களிடம் கடன் வட்டி வசூலிக்கக்கூடாது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.