தமிழ்நாட்டிற்குள் பயணிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தினமும் சுமார் ஆறாயிரம் என்கிற அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜூன் ஒன்றாம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டுவருகிறது. 

அந்தவகையில், தமிழ்நாடு அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்குள் பயணிக்க வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. அண்மையில், இ-பாஸ் முறையை எளிமையாக்கும் விதமாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்று அறிவித்திருந்த தமிழக அரசு, தற்போது தமிழகத்திற்குள் பயணிக்க இ-பாஸே  தேவையில்லை என அறிவித்துள்ளது. 

அதேநேரத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் அனைவரும் இ-பாஸ் பெற்றே வர வேண்டும். ஆதார் எண், செல்ஃபோன் எண், பயணச்சீட்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.