தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று 3949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86224ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தமிழகம் முழுவதும் மற்ற ஊர்களுக்கு சென்றவர்களால், அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 

கொரோனா பரவலை தடுக்க பொதுமுடக்கத்தின் அவசியம் இருப்பதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதிப்புக்கு ஏற்ப தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூன் 30 வரை அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. 

தமிழ்நாடு முழுவதும் பொதுமுடக்கம் ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 24-30 வரை அமலில் இருந்த முழு ஊரடங்கு, வரும் ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 6ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை, ஜூன் 24க்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது.

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.