பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Plus 1 Public Examination Marks Revaluation: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,23,261 பேர் எழுதினார்கள். இதனைத் தொடர்ந்து 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில், 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 தேர்வில் மாணவர்களைவிட 6.43% மாணவியர்களே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவியர் 95.13% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.70% பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 1 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

இதற்கிடையே பிளஸ் 1 தேர்வில் எதிர்பார்த்ததை விட மதிப்பெண் குறைவாக பெற்று விட்டோமே என கருதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடப்பாண்டு மார்ச் மாதம் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த இணையதளத்தில் நோடிபிகேசன் பகுதியில் 'எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு' என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்போது தோன்றும் பக்கத்தில் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை முதல் 13-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.