Asianet News TamilAsianet News Tamil

25 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி.. 12 மாவட்டங்களுக்கு புதிதாக எந்த தளர்வும் இல்லை

தமிழ்நாட்டில் மே 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 25 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
 

tamil nadu government allows to run buses in 25 districts and no relaxation for 12 districts
Author
Chennai, First Published May 17, 2020, 3:21 PM IST

தமிழ்நாட்டில் 10,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிப்பு குறைந்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். 

இன்றுடன் மூன்றாம் கட்ட பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், நான்காம் கட்ட பொதுமுடக்கம், இதுவரை இருந்த மாதிரி அல்லாமல் வித்தியாசமானதாகவும் நிறைய தளர்வுகளுடனும் இருக்கும் என்று ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

அந்தவகையில், தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள 25 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும். புதிதாக எந்த தளர்வும் இல்லை.

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தூத்துக்குடி, தேனி, மதுரை, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 25 மாவட்டங்களுக்கும் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

tamil nadu government allows to run buses in 25 districts and no relaxation for 12 districts

அதன்படி, இந்த 25 மாவட்டங்களிலும் அரசு பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும் வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம். இன்னோவா போன்ற பெரிய கார்களில் 3 பேரும் சிறிய கார்களில் 2 பேரும் பயணிக்கலாம். 

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

அந்தந்த மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்க TN e-pass தேவையில்லை.

மாவட்டங்களுக்குள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்றுவர பயன்படுத்தப்படும் டாக்ஸி மற்றும் ஆட்டோவுக்கு விலக்களிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து பிறபகுதிகளுக்கோ, பிறபகுதிகளிலிருந்து சென்னைக்கோ பேருந்துகளை இயக்க அனுமதியில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios