Asianet News TamilAsianet News Tamil

சென்னை மெரீனா கடற்கரை குதிரைகளுக்கு லைசென்ஸ்: தமிழ்நாடு கால்நடை நலவாரியம்

சென்னை மெரீனா கடற்கரை குதிரைகளுக்கு லைசென்ஸ் வழங்க தமிழ்நாடு கால்நடை நலவாரியம் முடிவு செய்துள்ளது

Tamil Nadu Animal Welfare Board to introduce licensing for beach horses in Chennai
Author
First Published Aug 7, 2023, 10:41 AM IST

விலங்குகள் வதை மற்றும் சட்டவிரோத லைசென்ஸ் பரிமாற்றம் ஆகியவற்றை தடுக்கும் வகையில், சென்னையில் கடற்கரை குதிரைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் வழங்க தமிழ்நாடு கால்நடை நலவாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி (இன்று)சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே உள்ள எம்எல்ஏ ஹாஸ்டல் சாலையில் குதிரை பரிசோதனை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலமாக உள்ளது. இந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், குதிரைகள் சரியாக பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக கால்நடை வாரியத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இந்த குதிரைகள் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குதிரைகளை பரிசோதித்து சுகாதார மதிப்பீடுகள், மைக்ரோசிப்பிங் மற்றும் உரிமம் வழங்குதல் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து இந்த முகாமிற்கு தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சியானது குதிரைகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் மைக்ரோசிப்பிங் அமைப்பு மூலம் குதிரைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லைசென்ஸ் மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்படுவதன் மூலம்ம், குதிரைகளின் நலனை உறுதிப்படுத்த ஒரு வெளிப்படையான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த குதிரைகளுக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.

பசுமை புரட்சி முதல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் வரை: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி!

குதிரைகள் குறிப்பாக சென்னை கடற்கரைகளில் காணப்படும் குதிரைகள், பட்டினியால் உயிரிழப்பது உள்ளிட்ட பல புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் தெரிவித்துள்ளார். “இந்த நிலைமையை  மேம்படுத்துவதற்கு ஒரே வழி வணிகத்தை ஒழுங்குபடுத்துவதுதான். எனவே, சென்னையில் உள்ள அனைத்து குதிரைகளுக்கும் மைக்ரோசிப் பொருத்தப்படும். ஆரோக்கியமான குதிரைகளை இயக்குவதற்கு உரிமையாளர்கள் உரிமம் பெற வேண்டும். இதன் மூலம் குதிரைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதுடன், அவற்றை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை திருவல்லிக்கேணியில் குதிரைகளுக்காக பிரத்யேகமாக தங்கும் இடம் அமைக்க சென்னை ஆட்சியரிடம் விலங்குகள் உரிமை அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிரானி பெரேரோ கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக மெரினா கடற்கரை குதிரைகள் நலனுக்காக உழைத்து வருகிறோம். அவற்றுக்கு சரியான உணவு, பராமரிப்பு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இந்த குதிரைகள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாக்க ஒரே இடத்தில் 200 குதிரைகள் கட்டும் அளவுக்கு தங்கும் இடம் அமைக்க கேட்டுள்ளோம். கலைவாணர் அரங்கத்திற்குப் பின்னால் 200 குதிரைகள் தங்கக்கூடிய நிலம் உள்ளது.” என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios