பசுமை புரட்சி முதல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் வரை: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி!
சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. அதில், சில குறிப்பிடத்தக்க சாதனைகளை இங்கே காணலாம்
காலணி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா பல்வேறு போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தியது. இறுதியாக, 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு ஜனநாயக நாடாக இந்தியா இருப்பதால் பல துறைகளிலும் இந்திய தேசம் வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரம், கல்வி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, அறிவியல், போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகின்றது.
பசுமைப் புரட்சி
இந்தியா விடுதலை அடைந்தபோது அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது. வானம் பார்த்த பூமியாகவே விவசாயம் இருந்தது. வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது. நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன. மக்கள் தொகையில் 70 சதவீதம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
விடுதலை பெற்ற இந்தியா உணவுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட, 1960களில், பசுமைப் புரட்சி வழிவகை செய்தது. அதன் மூலம் இந்தியா விவசாய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. இந்த முன்முயற்சியானது மேம்பட்ட விவசாய நுட்பங்கள், பயிர் விளைச்சல் அதிகரிப்பு மற்றும் உணவு தன்னிறைவு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது. மேம்பட்ட வேளாண்மை செயல்முறைகள் மற்றும் நீர்ப்பாசன வளர்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டால் வேளாண்மை மேம்படுத்தப்பட்டு உணவுத் தன்னிறைவு பெற்றது. அடிக்கடி பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஒருமுறை கூட பஞ்சம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது
வெண்மை புரட்சி
வெண்மைப் புரட்சி என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970இல் நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின்போது ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் புதிய மேம்படுத்தப்பட்ட கால்நடைகளைப் பயன்படுத்தி அதிக பால் உற்பத்தியைப் பெருக்குவதாகும். ஏழை விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அதேசமயத்தில், பால்பண்ணை தொழிலை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்த உதவியது. இதன் விளைவாக பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது. இந்தியாவின் வறுமையை போக்க வெண்மை புரட்சி பெருமளவு பங்களித்தது.
பொருளாதார வளர்ச்சி
சுதந்திரத்தின் பின் இந்தியப் பொருளாதாரம் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. முதல் பிரதமர் நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி வரை பல பொருளாதாரக் கொள்கைகளை முன்மொழிந்து உள்ளனர். இதன் மூலம், இந்தியா கணிசமான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், வாகனம், சுற்றுலாத் துறை, தொழில் துறை, விவசாயம், போக்குவரத்து மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இது முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சி உயர்வடைந்துள்ளது
உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் தரவரிசை 2010ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்குமிடையே நன்றாக வளர்ச்சி அடைந்து, உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. . கொரோனா பெருந்தொற்றால் கடந்த நாற்பதாண்டுகளில் முதல்முறையாக 2020-21-ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 7.4 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் 2021-22ஆம் ஆண்டு அந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுந்தது. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து ஈர்க்கப்படுகின்றன.
இந்தியாவின் ஒட்டுமொத்த 7.2 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது உலகின் மிக வேகமாக விரிவடையும் மற்றும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது. 2022-23 நிதியாண்டிற்கான தற்போதைய விலையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்சி ரூ.272.41 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021-22இல் இது ரூ.234.71 லட்சம் கோடியாக இருந்த ஜிடிபியை ஒப்பிடும்போது 16.1 சதவீத வளர்ச்சி விகிதத்தை குறிக்கிறது. இதன் மூலம், வரும் ஆண்டுகளில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளது.
கல்வி வளர்ச்சி
சுதந்திரமடைந்த ஆண்டான 1947களில் இந்தியாவின் எழுத்தறிவு 12 சதவீதமாக இருந்தது. அதாவது, 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். 1948இல் அப்போதைய பிரதமர் நேரு, ஒட்டுமொத்தக் கல்வி முறையிலும் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருவோம் என சூளுரைத்தார். அதனையடுத்து, எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளால், தற்போது 78 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. பெண் கல்விக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 82 சதவீதத்துக்கும் மேலாக கல்வி வளர்ச்சியில் இந்தியாவுக்கே முன்னேடியாக தமிழ்நாடு உள்ளது. உயர்கல்வி விகிதம் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. ஆரம்பக் கல்விக்கான அணுகல் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து வளர்ச்சி
சுதந்திரத்திற்கு முன்னர் 36,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது மூன்று லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக சாலைகள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் சாலை வசதி பல மடங்கு அதிகரித்துள்ளது. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. ரயில் போக்குவரத்து தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதிவேக இணைப்பை சாத்தியப்படுத்தும் வகையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிநவீன பொது போக்குவரத்து குறித்து பேசி வரும் பிரதமர் மோடி, ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறார். அமிர்த பாரத் திட்டம் தொடங்கப்பட்டு ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.
விண்வெளி ஆய்வு
இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியான இஸ்ரோ, வெற்றிகரமான செயற்கைக்கோள் ஏவுதல், சந்திரப் பயணங்கள் மற்றும் செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன் உட்பட பல மைல்கற்களை சாதித்துள்ளது. இந்த சாதனைகள் விண்வெளி ஆய்வில் இந்தியாவை ஒரு குறிப்பிடத்தக்க நாடாக மாற்றியுள்ளது.
சுதந்திர இந்தியா பல்வேறு விண்வெளி ஆய்வுகளையும் சோதனைகளையும் நடத்தியுள்ளது. 1962 இல், அப்போதைய பிரதமர் நேரு, விக்ரம் சாராபாயின் தொழில்நுட்ப ஆலோசனையுடன், விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை (INCOSPAR) உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1969ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சிக்கு தலைமை தாங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா 1975 இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தற்போது நிலவு ஆராய்ச்சிக்காக சந்திரயாந்3 திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்து வருகிறது. பல்வேறு நாடுகளும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ உதவி வருகிறது.
இந்திய அணுசக்தி
இந்தியா 1974ஆம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை செய்து, உலகின் ஐந்து அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இணைந்துவிட்டது. ஆனாலும், அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு வலுவான அணுசக்தி உள்கட்டமைப்பை இந்தியா நிறுவியுள்ளது. அணு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை நாடு அடைந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவின் 3 நிலை அணுசக்தி திட்டம் சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் யுரேனியம் இருப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது, ஆனால் இந்தியாவில் மிகப் பெரிய அளவு தோரியம் இருப்பு உள்ளது. எனவே, தோரியம் இருப்புகளைப் பயன்படுத்தி 3 நிலை அணுசக்தி திட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.
இந்தியாவில் அணு ஆற்றல் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, வேளாண்துறையில் ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் வேளாண் பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பதற்காக பயன்படுகிறது. மருத்துவத் துறையில் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காக உதவுகிறது
2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை எட்டுவது, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்க்கு அடுத்தபடியாக இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி உற்பத்தியாளராக உயர்த்துவது ஆகிய இரண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அணுசக்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, வெளியுறவுக் கொள்கை
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா ஒரு வலுவான ஜனநாயக அமைப்பைப் பராமரித்து வருகிறது, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியான அதிகார மாற்றங்களை உறுதி செய்கிறது. ஜனநாயகத்தின் கொள்கைகளை நிலைநிறுத்தி, நாடு பல தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. வெளியுறவுக் கொள்கை மூலம், உலக நாடுகளுடன் ஆழமான நட்பை இந்திய கடைப்பிடித்து வருகிறது. அமைதியான உறவை கொண்டு வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடனான நட்புறவு, பிராந்திய உறவு எனத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இந்தியாவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.
விளையாட்டு
சுதந்திர இந்தியாவில், அரசு விளையாட்டு சார்ந்த கட்டமைப்பு வசதிகளை நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்தது, மேம்படுத்தியது மற்றும் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்தது. அதன் விளைவாக, விளையாட்டுகளில், குறிப்பாக கிரிக்கெட், கபடி, பேட்மிண்டன், மல்யுத்தம், செஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஒலிம்பிக் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இது மற்றவரக்ளுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சின் விளைவால் கணினி தொழில்நுட்பம், தொலைபேசிகள் வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம், வாகனங்களின் வடிவமைப்பு, பொறியியல்துறை, பாதுகாப்பு, மருத்துவ துறை என அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன. சிறந்த தொழில்நுட்ப வளர்சியை கொண்டுள்ள இந்தியா உலகளவில் முக்கியமான நாடாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கு இல்லாத இடமே இல்லை என்ற நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவின் ராணுவ வளர்ச்சி
உலகின் மிக சிறந்த ராணுவ கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து உலகின் நான்காவது சக்திவாய்ந்த ராணுவ தேசமாக இந்தியா உள்ளது. உலகின் மிக உயரமான எல்லைப் பிரதேசம் எனக் கருதப்படும் சியாச்சின் மலையை இந்திய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பல பில்லியன் டாலர்களை ராணுவத்துக்காக செலவு செய்து தனது பாதுகாப்பு துறையில் இந்தியா வளர்சி கண்டுள்ளது.