தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்தது. இதன்காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது. டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. பலர் பலியாகவும் செய்தனர். குறிப்பாக குழந்தைகளே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிப்படைந்தனர்.

இதையடுத்து சுகாதார துறை சார்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொது இடங்கள் தூய்மையாக வைக்க அரசு அறிவுறுத்தியது. மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அழைக்கப்பட்டு வந்தன. இதனால் தற்போது டெங்குவின் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக பன்றி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கடந்த 15 நாட்களில் 164 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதுக்குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது நாடு முழுவதும் 1205 பேர் பன்றிக்காய்ச்சலால் இந்த ஆண்டு பலியாகி இருப்பதாகவும் ஆனால் தமிழகத்தில் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளனர். தற்போது பன்றி காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருவதாகவும் அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.