வனிதா - பீட்டர் பால் திருமண சர்ச்சை, கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் ஹாட் டாபிக்களில் ஒன்றாக உலாவருகிறது. ஏற்கனவே திருமணமான பீட்டர் பால் என்பவரை வனிதா 3வதாக மணந்துகொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு குரல் கொடுத்தார். 

இதையடுத்து வனிதா திருமண விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பலர் கிளம்பினர்; வனிதாவின் திருமணத்தை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி உள்ளிட்ட சிலர் வனிதாவிற்கு எதிராகவும் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். 

இந்த விவகாரத்தில், வனிதாவையும் பீட்டர் பாலுடனான அவரது திருமணத்தையும் கடுமையாக விமர்சித்தவர் சூர்யா தேவி என்ற பெண். சூர்யா தேவிக்கு வனிதாவும் பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவருக்கும் இடையே படுமோசமான வாக்குவாதங்கள் நடந்தன. இந்நிலையில், சூர்யா தேவி மீது வனிதா போலீஸில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, சூர்யா தேவியை போலீஸார் கைது செய்தனர். 

பின்னர் ஜாமீனில் வெளிவந்த சூர்யா தேவி, தரக்குறைவாக பேசியதற்கு தன்னை கைது செய்த போலீஸார், வனிதாவை ஏன் கைது செய்யவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், லட்சுமி ராமகிருஷ்ணனை படுமோசமாக அசிங்கப்படுத்தும் விதமாக பேசியிருந்தார் வனிதா. சூர்யா தேவி பேசிய விதத்திலேயே அவருக்கும் பதிலடி கொடுத்திருந்தார் வனிதா. அப்படியிருக்கையில், தன்னை கைது செய்த போலீஸார், வனிதாவை மட்டும் ஏன் கைது செய்யவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார். 

சூர்யா தேவி ஜாமீனில் வெளிவந்த நிலையில், சூர்யா தேவிக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், அவரை கைது செய்த மகளிர் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா இருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அதுகுறித்த செய்தியை தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றும் வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து, அந்த செய்தியை கண்டு ஆத்திரமடைந்த சூர்யா தேவி, அந்த குறிப்பிட்ட சேனலை விமர்சித்திருப்பதோடு, ஊடகவியலாளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருக்கிறார். 

இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில், எனக்கு கொரோனாவெல்லாம் இல்லை. எனக்கு கொரோனா இருந்ததாகவும் அதனால் என்னை கைது செய்த காவல்துறை ஆய்வாளருக்கும் கொரோனா பரவியதாகவும் புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். மீடியாக்காரர்களை நான் ஏற்கனவே விமர்சித்திருக்கிறேன். ஏன் விமர்சித்தேன்..? காரணமில்லாமல் விமர்சிக்கவில்லை. எனது மகளின் தோட்டை அடமானம் வைத்து மீடியாகாரர்களுக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்திருக்கிறேன். எனது வழக்கறிஞருக்கு கூட அது தெரியும். ஏன் மீடியாக்காரர்கள் இப்படி இருக்கிறீர்கள்? நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. அந்த செய்திகளையெல்லாம் போட வேண்டியதுதானே..? அதைவிடுத்து எனக்கு கொரோனா இருக்கிறது என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 

ஊடகவியலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கொடுத்ததாக சூர்யா தேவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீடியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.