நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் பொருட்டு அம்மா உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

ஏழை, எளியோருக்கு பயன் தரும் பொருட்டு கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை மாநகராட்சியின் கீழ் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. மேலும், இந்த உணவகங்களில் காலையில் இட்சி, பொங்கல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், எழுமிச்சை, கருவேப்பிலை சாதம், இரவில் சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் உணவுகள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் தினம்தோறும் 3.5 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உணவங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதேபோல், மலிவு விலையில் உணவு வழங்கப்படுவதால் வருவாயை விட செலவு பண்மடங்கு அதிகமாக உள்ளது.

இதேபோல், அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிய போதிலும் ஒரே மாதிரியான உணவு வகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, நஷ்டத்தை சரிகட்டவும், ஒரே மாதியான உணவு வகைகளை மாற்றி வாடிக்கையாளர்களை கவர புதிய உணவு வகைகளை வழங்குவது, காபி, டீ போன்றவற்றை விற்கவும் மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கென அதிகாரிகள் கூட்டத்தையும் நடத்தினர்.

இந்தநிலையில், அம்மா உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் புதிய வகை உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும், அவர்களின் கருத்தை கேட்டு பதிவு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, அம்மா உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் தனி நோட்டு வழங்கப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளரின் பெயர், தொழில், உண்ணும் உணவின் அளவு ஆகியவை குறித்து பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.