நாட்டையே திரும்பி பார்க்க வைத்த குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.


மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள குழந்தை சுர்ஜித் கடந்த 25ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அந்த நிமிடத்திலிருந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் குழந்தையின் கை அசைவு மனதை பதைபதைக்க வைத்தது. குழந்தை நலமாக மீட்கப்பட வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பினர். மதங்களைக் கடந்து ஒவ்வொருவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
எப்படியாவது குழந்தை மீண்டு விடமாட்டானா என்று சுர்ஜித்தின் பெற்றோர் மட்டுமல்ல, குழந்தை வைத்துள்ள ஒவ்வொருவருமே துடித்தனர். மீட்புப் பணியில் தடங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவஸ்தையில் மக்கள் துடித்தனர். தாமதம் ஏற்படுகிறதே என்று வேதனையில் ஆழ்ந்தனர். சோறு, தண்ணீர் இல்லாமல், காற்று இல்லாமல் குழந்தை எப்படியெல்லாம் தவித்தானோ என்ற வேதனையும் ஒவ்வொருவரையும் வாட்டியது. 
தங்களுடைய பிரார்த்தனை எப்படியும் குழந்தையை மீட்டுவிடும் என்று மக்கள் நம்பினர். ஒவொருவரும் தங்கள் மத நம்பிக்கையின்படி குழந்தை மீண்டு வர பிரார்த்தினர். தித்திக்க வேண்டிய தீபாவளி பண்டிகையையும் தூர ஒதுக்கிவைத்துவிட்டு, குழந்தையின் நிலையைக் காண தமிழகமே டிவி பெட்டி முன் உட்கார்ந்திருந்தது. ஆனால், மணித் துளிகள் கடந்துகொண்டே வந்த நிலையில் யதார்த்தின்படி திக்..திக் மனநிலையும் ஏற்பட்டதுண்டு. ஆனால், ஏதோ ஓர் அதிசயம் நிகழும் என்று எதிர்பார்த்தனர்.


ஆனால், எல்லாவற்றையும்  தாண்டி இயற்கை அந்தக் குழந்தையைக் கொண்டு சென்றுவிட்டது. 82 மணி நேர மீட்புப் பணிகள் தோல்வியில் முடிந்தன. ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் புதிதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 13 பேர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளனர். ஓரிருவர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் பெரும்பாலோனர் உயிரிழந்தனர். அவர்கள் வழியில் குழந்தை சுர்ஜித்தும் உயிரிழந்தான். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடி வையுங்கள் என்று தமிழகத்தின் பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு குழந்தை சென்றுவிட்டான். ஒரு மாபெரும் விழிப்புணர்வுக்காகக் குழந்தை தன் உயிரை தந்துவிட்டு சென்றிருக்கிறான்.
மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும். அது மட்டுமே குழந்தை சுர்ஜித் மரணத்துக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.